நாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது போதுமான அளவில் நீர்மின் உற்பத்தி இடம்பெறுவதால், மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படும் நிலை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி ஏற்றிய இரண்டு கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கையை வந்தடைய உள்ளன. முதலாவது கப்பல் செப்டம்பர் 4ஆம் திகதியும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12ஆம் திகதியும் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர் நுரைச்சோலை மின் நிலையத்தில் வழமையான அளவில் மின் உற்பத்தியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாததால் மின் உற்பத்தித்துறையில் குறிப்பிடத்தக்க சிக்கல் உருவாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





