Board of Quazis என்று அழைக்கப்படும் காதி சபையின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி எம்.ஐ. அமீர் மற்றும் சட்டத்தரணி அம்ஹர் ஷெரீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனம், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று வருட பதவிக் காலத்தினைக் கொண்ட காதி சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாகும். இதில் ஏற்பட்ட இரண்டு வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காகவே இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியான எம்.ஐ. அமீர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தலைவரான சட்டத்தரணி அம்ஹர், கொழும்பு மேற்கு காதி நீதிபதியாக முன்னர் செயற்பட்டார்.
நாட்டிலுள்ள 65 காதி நீதிமன்றங்களினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிராக காதி சபையிடம் மேன் முறையீடு செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு நான்கு தடவைகள் காதி சபை கூடும். இதில் மூன்று அமர்வுகள் கொழும்பிலும் ஒரு அமர்வு கல்முனையிலும் இடம்பெறும்
வக்பு சபையின் முன்னாள் தலைவர் முஹைதீன் ஹுசைன், சட்டத்தரணி பிஸ்ருல் அமீன் மற்றும் எம்.வை.எம். றபீக் ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவார்.





