டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலை அதிகரித்து வருவதாக UNICEF வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 2 கோடி குழந்தைகள் ஒரே ஆண்டில் ஏதேனும் ஒரு வகையான தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
🔹 1.5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் விரும்பாத பாலியல் உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர்.
🔹 சுமார் 90 லட்சம் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமில்லாத பாலியல் உரையாடல்கள் அல்லது படங்களை பகிருமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
🔹 சுமார் 40 லட்சம் குழந்தைகளின் தனிப்பட்ட பாலியல் படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளன.
ஆய்வில் பதிவான சம்பவங்களில் குறிப்பிடத்தக்க பகுதி சமூக ஊடக தளங்களுடன் தொடர்புடையதாகவும், சில சம்பவங்கள் ஆன்லைன் விளையாட்டுகளின் மூலமாகவும் இடம்பெற்றுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளை பாதித்தவர்களில் பெரும்பாலானோர் முற்றிலும் அறிமுகமற்றவர்கள் அல்ல என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பல சம்பவங்களில் குழந்தைகளுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் தொடர்புபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
⚠️ மிகவும் கவலைக்கிடமான மற்றொரு விடயம்:
தொழில்நுட்பம் வழியாக இடம்பெறும் இத்தகைய துஷ்பிரயோகங்களில் 40%க்கும் அதிகமான சம்பவங்கள் யாரிடமும் தெரிவிக்கப்படாமல் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. அதிகாரிகளிடம் முறையிடப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை 1%க்கும் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள், அரசாங்கங்கள், பாடசாலைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை UNICEF வலியுறுத்தியுள்ளது.
📌 குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்பு!





