மட்டக்களப்பு, கிரான்குளம் கடற்பகுதியில் இன்று (04) இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கிரான்குளம் கடற்பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் மூன்று மீனவர்கள் தோணியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட பாரிய அலையில் சிக்கி தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய துரைராஜா முத்தையா, ‘நாகேந்திரன்’ என அழைக்கப்படும் மீனவர் சங்கத் தலைவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அதேவேளை, விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தோணியில் பயணித்த 45 வயதுடைய செல்வகுமார் என்பவர் அலையை எதிர்த்து நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பியுள்ளார். காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள மீனவர் சங்கத் தலைவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர், சக மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





