இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, EOS-05 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை GSLV-F17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 36,000 கிலோமீற்றர் உயரத்தில் உள்ள புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், பேரிடர் கண்காணிப்பு, விவசாயம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட தேவைகளுக்காக பரந்த பகுதிகளின் அடிக்கடி படங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
GISAT-1A எனவும் அழைக்கப்படும் EOS-05, 2021ஆம் ஆண்டு சுற்றுப்பாதையை அடையத் தவறிய GISAT-1 செயற்கைக்கோளுக்குப் பதிலாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் திட்டமிடப்பட்ட செயற்பாட்டு காலம் 10 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





