இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் 89.04 மீற்றர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், 87.47 மீற்றர் தூரம் எறிந்த போலந்தின் டாவிட் வெக்னரை பின்தள்ளி ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பெற்றார்.
திரினிடாட் அண்ட் டொபாகோவின் கேஷோர்ன் வால்காட் 83.99 மீற்றர் தூரத்துடன் மூன்றாம் இடத்தைப் பெற்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் நான்காம் இடத்தையும், கென்யாவின் ஜூலியஸ் யெகோ ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.
2026ஆம் ஆண்டில் ருமேஷ் தரங்க பெற்றுள்ள மற்றுமொரு முக்கிய சர்வதேச வெற்றியாக இது அமைந்துள்ளது. இதேவேளை, ஜூன் 4ஆம் திகதி ரோமில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து இந்த ஆண்டின் உலகின் சிறந்த சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார்.
உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் வீரராக டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் களமிறங்கிய ருமேஷ் தரங்க, 89.04 மீற்றர் எறிதலுடன் பட்டத்தை தனதாக்கி இலங்கை தடகளத்துறைக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.





