காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு பயணம் செய்த 13 பேர், சந்தேகத்தின் பேரில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் இந்தியாவிலிருந்து மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா செல்லும் போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் குறித்த 13 பேரும் சில தகவல்களை வழங்கியதாகவும், அவற்றில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கைக்கு திரும்பிய 13 பேரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





