இலங்கையின் சுகாதார சேவையை மறுசீரமைக்க புதிய திட்டம் – ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டில் மக்கள் சுகாதார சேவைகளைப் பெறும் தற்போதைய முறையில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் முதற்கட்டமாக தங்களது குடும்பத்திற்கான முதன்மை சுகாதார வைத்தியரை அணுகும் வகையில் 1,000 “ஆரோக்ய” நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முதன்மை வைத்தியரின் பரிசோதனை மற்றும் பரிந்துரையின் பின்னரே தேவைக்கேற்ப பெரிய வைத்தியசாலைகள் அல்லது சிறப்பு வைத்தியர்களிடம் நோயாளிகள் அனுப்பப்படும் முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், அரச வைத்தியசாலைகளில் வருடாந்தம் சுமார் 80 மில்லியன் வெளிநோயாளர் வருகைகள் பதிவாகின்றன என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அதிகளவான நோயாளர் வருகைகளை முறையாக ஒருங்கிணைத்து, ஆரம்ப நிலையிலேயே தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் வைத்தியசாலைகளில் காணப்படும் அழுத்தத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவர் வழங்கும் மருந்துகளை முழுமையாகவும் உரிய முறையிலும் பயன்படுத்துவது அவசியம் என்றும், தேவையற்ற மருந்துப் பயன்பாடு மற்றும் சிகிச்சை முறைகளை பின்பற்றாத நிலைமைகள் குறித்து பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.





