அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரிலிருந்து புறப்பட்ட குறித்த சரக்கு விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் மியாமி விமான நிலையத்தை வந்தடைந்தபோது ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது.
ஓடுபாதையை விட்டு விலகிய விமானம், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதிப் பகுதியை நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அப்பகுதியில் இருந்த சில வாகனங்களுடன் விமானம் மோதியதையடுத்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் விமானத்தில் பயணித்தவர்கள் என்பதும், எத்தனை பேர் விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்கள் என்பதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
விமான விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





