ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றவுள்ளார்.
இலங்கை தொடர்பாக பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்துமூல புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் இடம்பெறுகிறது.
2025 ஒக்டோபர் முதல் 2026 ஜூலை வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், ஊழலை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சில முக்கிய குற்றச்சாட்டுகள் தொடர்பான கைது மற்றும் விசாரணைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பயன்பாடு தன்னிச்சையான கைதுகள் மற்றும் நீண்டகால தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கக்கூடும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு, காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் அறிக்கையில் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் மேலதிக நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, ஊழல் வழக்குகள் மற்றும் போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியுடன் தொடர்புடைய சில குற்றங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





