காசிபி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம்; ரூ.20,000 பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது
ஷாதிர் ஏ. ஜப்பார்
சம்மாந்துறை முகைதீன் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற Rawla Champion Trophy – 2026 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் காசிபி அணியை வீழ்த்திய மஹஸ்ஸினி அணி, இவ்வாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தனதாக்கிக் கொண்டது.
Rawla விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், உலமாக்களுக்கான கிரிக்கெட் போட்டியாக இச்சுற்றுத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றிருந்தன.
தொடரின் ஆரம்பம் முதல் பல்வேறு கட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹஸ்ஸினி மற்றும் காசிபி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதனையடுத்து நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மஹஸ்ஸினி அணி, காசிபி அணியை வீழ்த்தி Rawla Champion Trophy – 2026 கிண்ணத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டத்தை வென்ற மஹஸ்ஸினி அணிக்கு ரூ.20,000 பணப்பரிசுடன் வெற்றிக் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற காசிபி அணிக்கு ரூ.10,000 பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டதுடன், மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கும் வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டது.
அத்துடன், போட்டித் தொடரில் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களில் Man of the Match மற்றும் Man of the Series விருதுகளுக்குத் தெரிவான வீரர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் போட்டித் தொடரின் ஏற்பாட்டாளர்கள், அனுசரணையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இறுதிப் போட்டியை கண்டுகளித்ததுடன், வீரர்களுக்கு தமது ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கினர்.
உலமாக்களுக்கிடையிலான விளையாட்டு மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுத்தொடர், சிறப்பான முறையில் நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.





