நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த நீரின் அளவு 47.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது அவற்றின் கொள்ளளவில் 34.4 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாகவும், அவற்றில் சராசரியாக சுமார் 20 சதவீதம் அளவிலேயே நீர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதுள்ள நீர்வளம் யால பருவ பயிர்ச்செய்கையை நிறைவு செய்வதற்கும், நீர்த்தேக்கங்களைச் சார்ந்த பகுதிகளின் குடிநீர் தேவைகளை அடுத்த மழை பெய்யும் வரை பூர்த்தி செய்வதற்கும் போதுமானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்பநிலை காரணமாக நீராவியாகும் அளவு அதிகரித்துள்ள நிலையில், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் மஹா பருவ பயிர்ச்செய்கைக்கான திட்டமிடல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு, பயிர்ச்செய்கைக் கூட்டங்களில் மஹா பருவத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





