ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 5 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடையதாகக் கூறப்படும் 4 எண்ணெய் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகிலிருந்த மற்றொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் 20 ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் 18 ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறிக்கப்பட்டதாகவும் ஜோர்தான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள எண்ணெய் கப்பல்கள் மீதும் மேலதிக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த பரஸ்பரத் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா தாக்கிய 5 எண்ணெய் கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படை மற்றும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கு நிதியளிப்பதாகக் கூறப்படும் எண்ணெய் வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடையவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.





