ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் உள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், 6 பேர் காணாமல் போயுள்ளதாக அவசரகால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 33 பேர் கொண்ட மலையேற்றக் குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது சிக்கியவர்களில் 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும், மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷ்ய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வருகிறது.





