இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS Udaygiri பல்நோக்கு Stealth Frigate போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மூன்று நாட்கள் Operational Turnaround (OTR) நடவடிக்கைக்காக இந்த போர்க்கப்பல் கொழும்பில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் ஊடாக இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதுடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான இயந்திர உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்களையும் INS Udaygiri கொண்டு வந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை சந்திக்கவுள்ளார்.
மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக INS Udaygiri கப்பலில் இலங்கைப் பிரமுகர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இடையில் தொழில்சார் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளதுடன், “Clean Sri Lanka” திட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணியிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கு முன்னர் 2025 நவம்பரில், INS Udaygiri, இந்தியாவின் INS Vikrant விமானந்தாங்கிக் கப்பலுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்து SLN IFR-2025 நிகழ்வில் பங்கேற்றிருந்தது.
மேலும், Cyclone Ditwah புயலின்போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளிலும் INS Udaygiri பங்கேற்று, இலங்கைக்கு அவசர நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.
இந்திய கடற்படை கப்பல்களின் இத்தகைய விஜயங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.





