கொழும்பு: பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் தரவு முறைமை அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, முறைமை மீளச் செயற்படும் வரை தற்காலிக நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று “Download Application” ஊடாக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்,
🔹 தேசிய அடையாள அட்டையின் பிரதி
🔹 கடவுச்சீட்டின் பிரதி
ஆகியவற்றை clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த தற்காலிக நடைமுறையின் கீழ் தற்போது எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைமை மீண்டும் செயற்படுத்தப்பட்ட பின்னர், இவ்வாறு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழி முறையில் விண்ணப்பித்து, உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களில் சான்றிதழ் வழங்கத் தயாராக உள்ளவர்களின் Reference Numbers உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு Reference Number வெளியிடப்பட்டவர்கள் சுஹுருபாய, பத்தரமுல்லையில் உள்ள பொலிஸ் கிளியரன்ஸ் பிரிவில் தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reference Number வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களின் அறிக்கைகள், முறைமை மீண்டும் செயற்படுத்தப்பட்ட பின்னர் வழங்கப்படும்.
தொழில்நுட்பப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சேவை வழமைக்குத் திரும்பியவுடன் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
📌 குறிப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி அல்லது குடியேற்ற நடவடிக்கைகளுக்காக Police Clearance Certificate தேவைப்படுவோர் இந்த தற்காலிக நடைமுறையை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





