எதிர்வரும் உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு, நிலையான அணிக்குழுவொன்றை உருவாக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு செயற்பட்டு வருவதாக தேர்வுக்குழுத் தலைவர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணித் தெரிவுகள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான அணிகளில் மீண்டும் இடம்பெற்றுள்ள சரித் அசலங்கா, அவரது அனுபவம் மற்றும் முன்னைய தலைமைத்துவ அனுபவத்தை கருத்திற்கொண்டு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கமிந்து மெண்டிஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அவரது செயல்திறன் அல்லது ஒழுக்கம் தொடர்பான காரணத்தினால் அல்ல என தேர்வுக்குழுத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கமிந்துவை முக்கிய துடுப்பாட்ட வீரராகக் கருதி, அவர் தனது துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
🔹 காயத்திலிருந்து திரும்பும் வீரர்களுக்கு புதிய நடைமுறை
காயத்திலிருந்து மீண்டு வரும் வீரர்கள் சர்வதேச போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் உள்நாட்டு போட்டியொன்றில் விளையாடி தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உள்நாட்டு போட்டியில் விளையாடாமல் மீண்டும் அணிக்கு திரும்பி, பின்னர் டெஸ்ட் போட்டியின்போது மீண்டும் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹 ஒருநாள் அணியில் தசுன் ஷானக்காவுக்கு வாய்ப்பு?
எதிர்வரும் உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு, ஒருநாள் அணியில் 7ஆம் இலக்க துடுப்பாட்ட சகலதுறை வீரராக தசுன் ஷானக்காவை பயன்படுத்துவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
அணியின் சமநிலையை வலுப்படுத்தக்கூடிய உண்மையான சகலதுறை வீரர்களுக்கான பற்றாக்குறை இலங்கை அணியில் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மிலான் ரத்நாயக்க ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை என்றாலும், அவர் இலங்கையின் எதிர்கால திட்டங்களில் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தற்போதைய வறண்ட மற்றும் வெப்பமான காலநிலை மற்றும் ஆடுகளங்களின் தன்மையை கருத்திற்கொண்டு, ஒருநாள் அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுக்குழு விளக்கமளித்துள்ளது.
🔹 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சஹான் அரச்சிகே தலைமை
அனுபவம் வாய்ந்த வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சஹான் அரச்சிகே இலங்கை ஆசிய விளையாட்டுப் போட்டி அணியின் தலைவராக செயல்படுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் Lanka Premier League போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களும் எதிர்கால தேசிய அணிக்காக தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சோனல் தினுஷா தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய திறன் அவருக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
🎯 உலகக் கிண்ணத்தை நோக்கி திட்டமிடல்
இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களின் ஊடாக உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் முக்கிய வீரர்களை அடையாளம் கண்டு, ஒரு நிலையான அணியை உருவாக்குவதே தேர்வுக்குழுவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெற்றி பெறுவதற்காகவே திட்டமிடுகிறோம்; தோல்வியடைவதற்காக அல்ல” என தேர்வுக்குழுத் தலைவர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.





