நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளில், 54 விற்பனை நிலையங்களில் எடைகுறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கடந்த செப்டெம்பர் 1 முதல் 3ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 118 கடைகள் மற்றும் பேக்கரிகளில் சோதனைகளை மேற்கொண்டது.

இதன்போது, எடை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையங்களில் 54 இடங்களில் எடைகுறைந்த பாண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 76 கடைகள் மற்றும் பேக்கரிகளில் பாணின் எடை முறையாக காட்சிப்படுத்தப்படாததுடன், 65 இடங்களில் விலை முறையாக காட்சிப்படுத்தப்படாததும் கண்டறியப்பட்டுள்ளது.
எடைகுறைந்த பாணை தயாரித்து விநியோகித்த பேக்கரிகளை அடையாளம் காணும் வகையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 81 பேக்கரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, முழு பாணின் எடை 450 கிராமாகவும், அரைப் பாணின் எடை 225 கிராமாகவும் இருக்க வேண்டும்.

எடைகுறைந்த பாண் தயாரிப்பது உறுதி செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர்களுக்கு, உற்பத்தி நடைமுறைகளை உடனடியாக திருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய சோதனைகள் மற்றும் பேக்கரி ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாணின் எடை, விலை அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற CAA அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் தெரிவிக்க முடியும்.





