நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய போதே கோஷி (Bhote Koshi) ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இலங்கை அரசாங்கம் 10 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது.
இலங்கையின் நேபாளத்திற்கான தூதுவர் ருவந்தி டெல்பிட்டிய, இன்று (09) காத்மாண்டுவில் உள்ள நேபாள வெளிவிவகார அமைச்சில் வைத்து, நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிஷிர் கானால் அவர்களிடம் இந்த நிதியுதவியை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ராசுவா, நுவாகோட், தாதிங் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவி, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபத்தையும் ஒற்றுமையையும் தெரிவித்த இலங்கை தூதுவர், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.





