ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், நாடு சார்ந்த தீர்மானங்கள் தொடர்பில் நம்பகமான மீளாய்வு மற்றும் முடிவுக்கு கொண்டுவரும் நடைமுறை அவசியம் என இலங்கை வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரல் 2-ன் கீழான பொது விவாதத்தில் உரையாற்றிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க, தேசிய வழிமுறைகள், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி மூலம் முன்னேற்றம் காண்பிக்கும் நாடுகளுக்கான பிரத்யேக தீர்மானங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நம்பகமான வழிமுறை ஒன்றை பேரவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், நாடு சார்ந்த ஆணைகள் தெளிவான இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் அவ்வப்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான சந்தர்ப்பங்களில், நாடு சார்ந்த தீர்மானங்களில் காலாவதி சரத்துகள் மற்றும் படிப்படியாக விலகும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கை செப்டம்பர் 08ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.





