பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது.
எனினும், சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறித்த பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லுபடியற்றதாக கருதப்பட வேண்டும் என இன்று (10) அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பின் சட்டபூர்வத்தன்மை தொடர்பான நீண்டகால விவகாரத்தில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.





