இலங்கையின் சீர்திருத்தங்கள் நடைமுறையில் வெளிப்பட வேண்டும் – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் முன்னெடுப்பதாக அறிவித்துள்ள சீர்திருத்தங்கள் வெறும் உறுதிமொழிகளாக இல்லாமல், நடைமுறையில் உறுதியான முன்னேற்றமாக வெளிப்பட வேண்டும் என இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் Core Group வலியுறுத்தியுள்ளது.

கனடா, மலாவி, மொன்டெனேக்ரோ, வட மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்தக் குழு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி உள்ளிட்ட சவால்களை குழு ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அரசாங்கம் அறிவித்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் உறுதியான முன்னேற்றமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மேற்கொண்டுள்ள சில சாதகமான நடவடிக்கைகளையும் குழு வரவேற்றுள்ளது. குறிப்பாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஒப்பந்தம் 190-ஐ அங்கீகரித்தமை மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் (CRPD) தொடர்பில் இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் அவசியம் என Core Group தெரிவித்துள்ளது.

தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான வழக்குகள் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெறும் பாரிய புதைகுழி அகழ்வுகள் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதை இவை நினைவூட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழுக்களுக்கு எதிரான அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ஆட்சி முறையை மேலும் வலுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வெளிப்படையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.

சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுத்தல், காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், தடுப்புக் காவல் நிறுவனங்களில் மனித உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் சுயாதீன நிறுவனங்களை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை அவசியம் எனவும் கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore