அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக்கொண்டால், அமெரிக்க வயது வந்த ஒவ்வொருவருக்கும் 5,000 அமெரிக்க டொலர் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு குடியரசுக் கட்சியின் முதலாவது இடைத்தேர்தல் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இந்த முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.
இந்தத் தொகை “டிரம்ப் டிவிடெண்ட்” என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எந்த முறையில் வழங்குவது மற்றும் அதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தவர்கள் உள்ளதாகக் கணக்கிடப்படும் நிலையில், அனைவருக்கும் தலா 5,000 டொலர் வழங்கப்பட்டால், அரசாங்கத்திற்கு சுமார் 1.35 டிரில்லியன் டொலர் செலவாகும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஈரான் மீதான போர் உள்ளிட்ட விடயங்களால் அமெரிக்க மக்களிடையே அதிருப்தி நிலவும் சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு தேர்தல் பிரசாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்திய டிரம்ப், தமது ஆட்சியின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், ஜனநாயகக் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனினும், 5,000 டொலர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.





