பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கியப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இன்று (11) காலமானார்.

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எளிமையான மொழியிலும் நகைச்சுவை கலந்த பேச்சிலும் பட்டிமன்றங்களை நடத்தி, தமிழக மக்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் சாலமன் பாப்பையா. சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்ட அவரது பட்டிமன்றங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களை எளிய முறையில் விளக்கி, தமிழ் இலக்கியத்தின் சுவையை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தார்.

மேலும், இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’ மற்றும் ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்துறையில் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ள சாலமன் பாப்பையா, ‘பட்டிமன்றமும் பாப்பையாவும்’ என்ற தன்வரலாற்று நூலையும் வெளியிட்டுள்ளார். திருக்குறள் உரை, புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளுக்கும் உரை எழுதியுள்ளார்.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக தமிழக அரசின் கலைமாமணி விருது (2000) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ்ப் பேரறிஞர் விருது (2010) உள்ளிட்ட கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கியத்திலும் பட்டிமன்ற உலகிலும் தனக்கென அழியாத தடம் பதித்த சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore