தாய்லாந்தின் சட்டங்கள் மற்றும் கலாசாரத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாங்கொக்கில் நேற்று (10) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குறிப்பாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் சில நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ஊடகத் துறையைச் சேர்ந்த சோந்தி லிம்தோங்குல், தாய்லாந்தின் விருந்தோம்பல் என்பது அந்நாட்டின் சட்டங்களையும் இறையாண்மையையும் மீறுவதற்கான அனுமதி அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் தூதரகத்தின் துணைத் தூதுவர் ராமி டெப்லிட்ஸ்கி, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் எழுந்துள்ள எதிர்மறையான கருத்துகளை தூதரகம் புறக்கணிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், தாய்லாந்தின் சட்டங்கள் மற்றும் கலாசாரத்தை மதிக்குமாறு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வழங்க இரு நாடுகளின் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்பெட்கியோவும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்பது தாய்லாந்தின் கொள்கையாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு அனுமதி வழங்கப்படாது என வலியுறுத்தியுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 277,000-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக அந்நாட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 7% அதிகமாகும்.
இதேவேளை, தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளின் தவறான நடத்தைகள் தொடர்பில் இஸ்ரேலியர்களை மட்டும் குறிவைப்பது சரியல்ல என்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





