இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இருதரப்பு சந்திப்பின்போது, தமிழின் தொன்மையான சிறப்புமிக்க ‘திருக்குறள்’ நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பதிப்பை பரிசாக வழங்கியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18ஆவது BRICS உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் குறித்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளின் 1,330 குறள்களும் இந்த ரஷ்ய மொழிபெயர்ப்பு பதிப்பில் இடம்பெற்றுள்ளன. அறம், பொருள், ஆட்சி, ஒழுக்கம் மற்றும் அன்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறள்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் இந்தியாவின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், ரஷ்ய மொழிபெயர்ப்பை நைரா ம்கர்ட்சேயன் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பரிசுகளை பிரதமர் மோடி முன்னதாகவும் ஜனாதிபதி புடினுக்கு வழங்கியுள்ளார். 2024ஆம் ஆண்டு கசானில் நடைபெற்ற BRICS மாநாட்டின்போது ஜார்க்கண்டின் சோஹ்ராய் ஓவியத்தையும், 2025ஆம் ஆண்டு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை, அசாம் தேயிலை மற்றும் வெள்ளிக் குதிரையையும் பரிசாக வழங்கியிருந்தார்.
தற்போதைய சந்திப்பில் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பரிசாக வழங்கப்பட்டமை, தமிழ் இலக்கியத்தின் உலகளாவிய பரவலையும் அதன் கலாசார முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.





