சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இரண்டு நாள் BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (12) இந்தியாவின் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். இந்தியா–சீனா இடையிலான உறவுகளை மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஷி ஜின்பிங்கும் இன்று மாலை இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட நீண்டகால இராணுவ முறுகலைத் தொடர்ந்து இந்தியா–சீனா உறவுகளில் ஏற்பட்ட பதற்றத்தை குறைத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எல்லைப் பிரச்சினை, எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களின் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷி ஜின்பிங்கின் இந்திய விஜயம் மற்றும் மோடியுடனான சந்திப்பு, இந்தியா–சீனா உறவுகளின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





