அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

30 பயிலுநர்களுக்கு இரண்டாம் நாள் நடைமுறைப் பயிற்சி

தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ், பயிலுநர்களுக்கான நீச்சல் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (12) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டதுடன், அவர்களில் மூன்று அரச உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

இதன்போது, அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் ஏற்கனவே பயிற்சி பெற்ற எம்.டி.எம். றிசாட், எஸ்.என். தில்சாத் பர்வீஸ் மற்றும் எஸ்.ஐ.எம். பிறோஸ் ஆகியோரால் பயிலுநர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நீச்சல் தடாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், நீச்சலின் அடிப்படை நுட்பங்கள், நீரில் பாதுகாப்பாகச் செயற்படும் முறைகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்துடன், நீரில் ஏற்படும் அவசரநிலைகளின்போது துரிதமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பயிலுநர்களுக்கு வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். மஜீட், எம்.எம். சதாத் மற்றும் என்.டி.எம். ஜெமீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய நீர்சார் அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது துரிதமாகச் செயற்பட்டு உயிர்களைக் காப்பாற்றக்கூடிய திறமையான உயிர்காக்கும் மற்றும் மீட்புப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore