அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.
பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 2,910 குடும்பங்களைச் சேர்ந்த 9,177 பேரும், மகா ஓயா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 865 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 பேரும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் ஊடாக தொடர்ச்சியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் வறட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பிரதேச செயலாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்களை வலுப்படுத்தி, வெப்பநிலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் அதனை எதிர்கொள்வதற்கான அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள், நிறுவன ரீதியான அனர்த்த அபாய செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமூக மட்ட அனர்த்த அபாய முகாமைத்துவ நடவடிக்கைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





