மாரவில கடற்கரைப் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
குளியாபிட்டிய, அனுக்கனை பகுதியைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்றிருந்த குறித்த இளைஞர், மேலும் 6 பேருடன் இணைந்து குளியாபிட்டியிலிருந்து மாரவில கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு பாறைகள் அமைந்துள்ள பகுதியில் மணல் திட்டில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென சீறிப்பாய்ந்த ராட்சத கடல் அலையில் சிக்கி 5 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது பிரதேசவாசிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், குறித்த இளைஞரை மீட்க முடியவில்லை. அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றொரு இளைஞர் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
இதேவேளை, அதே பகுதியில் நேற்று பிற்பகல் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 3 பெண்களை பிரதேசவாசிகள் துரிதமாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
மாரவில கடற்பகுதியில் இதுவரை 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் மாரவில கடலில் நீராடிய 15 பேர் கடல் அலைகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆபத்தான கடற்பகுதியில் பொதுமக்கள் கடலில் இறங்குவதையும் நீராடுவதையும் தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கைப் பலகைகள் சில, அங்கு வருகை தரும் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடல் அலைகள் மற்றும் நீரோட்டம் அதிகமாக காணப்படும் இப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





