முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சல்லையின் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (15) உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சுரேஷ் சல்லைக்கு, தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து உள்நோயாளராக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன.
எனினும், முன்னதாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்போதிலும் இன்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, முன்னர் அரச புலனாய்வுச் சேவையில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் சேனாரத் பண்டாரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விசாரணைகளுக்கு தேவையான நபராக அடையாளம் காணப்பட்டுள்ள அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





