இலங்கையில் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1, 2026 வரை “தேசிய சிறுவர் வாரம் – 2026” அனுஷ்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த தேசிய சிறுவர் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இணையம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள், உளவியல் மற்றும் சமூக அழுத்தங்கள், புறக்கணிப்பு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறுவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் வாரத்தின்போது சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.





