ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – 48 மணி நேரத்திற்குப் பிறகு விமானி மீட்பு
ஈரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்து தப்பிய அமெரிக்க விமானி ஒருவர் 48 மணி நேரத்திற்குப் பின்னர் சிறப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 கோடி டாலர் மதிப்புடைய F-15E போர் விமானம், தோளில் சுமந்து ஏவக்கூடிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானி பாராசூட் மூலம் கீழிறங்க முயன்றபோது, பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் கட்டுப்பாடின்றி தரையை நோக்கி விழுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தரையை அடைந்த பின்னர் காயமடைந்திருந்த போதிலும், ஈரான் படையினரிடம் சிக்காமல் இருக்க அவர் நீண்ட தூரம் நடந்து சென்று மலைப்பகுதியில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அவரது முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் கை ஆகியவற்றில் முறிவுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே விமானத்தில் இருந்த மற்றொரு அமெரிக்க வீரர் சுமார் 6 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டார். அவரை மீட்கச் சென்ற அமெரிக்க சிறப்புப் படையினருக்கும் ஈரான் படைகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானுக்குள் செயல்பட்ட அமெரிக்க மீட்புக் குழுவினர் பயன்படுத்திய சில விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பாலைவனப் பகுதியில் சிக்கியதைத் தொடர்ந்து, அவற்றை எதிரியின் கைகளுக்குச் செல்லாமல் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 90-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈரானுக்குள் தரையிறங்கியிருந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.





