இங்கிலாந்து: மூளையில் புற்றுநோய் இருப்பதாக தவறாகக் கண்டறியப்பட்ட பெண் ஒருவர், சுமார் 11 ஆண்டுகளாக தேவையற்ற கீமோதெரபி சிகிச்சையைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதில் கடுமையான தலைவலி காரணமாக மருத்துவமனையை நாடிய பெக்கி ஜோன்ஸுக்கு, நான்காம் நிலை Glioblastoma எனப்படும் தீவிரமான மூளைப் புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்றும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, Temozolomide என்ற கீமோதெரபி மருந்தை நீண்டகாலமாக அவர் பயன்படுத்தியுள்ளார். இதனால் தொடர்ந்து குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வாய்ப்புண்கள் மற்றும் கடுமையான சோர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ மறுஆய்வில் அவருக்கு ஒருபோதும் மூளைப் புற்றுநோய் இருந்ததில்லை என்பது தெரியவந்ததாக BBC தெரிவித்துள்ளது.
உண்மையில், அவருக்கு Tumefactive demyelination எனப்படும் மூளையில் ஏற்படும் அழற்சி பாதிப்பு இருந்ததாகவும், இதற்கு வேறு வகையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்டகாலமாக தேவையற்ற புற்றுநோய் சிகிச்சை வழங்கப்பட்டதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், Royal College of Physicians மேற்கொண்ட ஆரம்பகட்ட மறுஆய்வில் பரிசோதிக்கப்பட்ட 20 நோயாளர் வழக்குகளில் 15 வழக்குகள் ஒட்டுமொத்தமாக திருப்திகரமாக இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.





