சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து துணையைத் தேடிய மூன்று ஆப்பிரிக்க காட்டு நாய்களின் அசாதாரணப் பயணம் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜாம்பியா முழுவதும் பயணித்த இந்த மூன்று காட்டு நாய்களும், மனிதர்கள் வசிக்கும் பகுதிகள், நகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகள் போன்ற பல்வேறு தடைகளைத் தவிர்த்து தங்களது பயணத்தை மேற்கொண்டுள்ளன.
இந்தப் பயணம் சுமார் 8 மாதங்கள் நீடித்ததுடன், நேர்கோட்டில் சுமார் 260 மைல்கள் (420 கி.மீ) மட்டுமே இருந்த பாதையை, நிலப்பரப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் ஒட்டுமொத்தமாக அதைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக தூரம் கடந்து சென்றுள்ளன.
ஆப்பிரிக்க காட்டு நாய்கள் கூட்டமாக வாழும் சமூக விலங்குகளாகும். பிறந்த கூட்டத்திற்குள்ளேயே இனப்பெருக்கம் செய்யாமல், பொதுவாக 2–3 வயதில் புதிய துணையைத் தேடி தங்களது கூட்டத்திலிருந்து வெளியேறுகின்றன.
இந்தப் பயணம் வெறும் உணவு அல்லது புதிய வாழ்விடத்தைத் தேடும் பருவகால இடம்பெயர்வு அல்ல. இனப்பெருக்கத்திற்கான துணையைத் தேடி ஒருவழியாக மேற்கொள்ளப்படும் பயணம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆப்பிரிக்காவில் தற்போது காடுகளில் சுமார் 6,000 காட்டு நாய்களே எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது.
⚠️ பல்வேறு ஆபத்துகள்
இந்த ஆய்வில் GPS காலர்கள் பொருத்தப்பட்டிருந்த சில காட்டு நாய்கள் சட்டவிரோத வேட்டைக்காக வைக்கப்பட்ட கண்ணிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன. மூன்று பெண் காட்டு நாய்களில் இரண்டும் உயிரிழந்த நிலையில், மூன்று ஆண் காட்டு நாய்கள் தங்களது நீண்ட பயணத்தை நிறைவு செய்தன.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை தனித்தனி பகுதிகளாக வைத்திருப்பது மட்டும் போதுமானதல்ல. நகரங்கள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்களால் பிரிக்கப்பட்ட வனப்பகுதிகளை இணைக்கும் வனவிலங்கு வழித்தடங்கள் (Wildlife Corridors) உருவாக்கப்பட வேண்டும்.
இந்த ஆய்வு, பெரிய பரப்பளவில் சுற்றித்திரியும் காட்டு நாய்கள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் எதிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கு, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.





