செப். 20 முதல் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப் பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore