இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) முதன்முறையாக 1.9 ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகையை நீண்டகாலத்தில் நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு அளவைவிட இது குறைவாகும்.
இந்தியாவின் பதிவாளர் நாயகம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய மாதிரி பதிவுமுறை (SRS) அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2000களில் இந்தியாவின் TFR சுமார் 3.3 குழந்தைகள் ஒரு பெண்ணுக்கு என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது அது 1.9 ஆகக் குறைந்துள்ளது.
பெண்களின் கல்வி மற்றும் கருத்தடை வசதிகளுக்கான அதிகரித்த அணுகல், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரித்தல் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்தமை உள்ளிட்ட காரணிகள் பிறப்பு விகிதச் சரிவுக்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
மாநிலங்களுக்கு இடையிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படுகிறது. பீகாரில் TFR 2.9 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 2.6 ஆகவும் உள்ள நிலையில், டெல்லியில் 1.2 ஆகவும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா 1.3 ஆகவும் பதிவாகியுள்ளது.
பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தால், எதிர்காலத்தில் இந்தியாவின் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து, முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலை உருவாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட எதிர்கால அரசியல் மற்றும் நிதிப் பகிர்வு விவகாரங்களிலும் இந்த மக்கள் தொகை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்: Al Jazeera / Newswire





