சவூதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தொலைபேசியில் National Warning Alert (தேசிய அவசர எச்சரிக்கை) கிடைத்தால், உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியில் இருப்பவர்கள் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லவோ அல்லது வலுவான சுவரின் பின்னால் மறைந்து கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திறந்த வெளிகள், கண்ணாடிப் பகுதிகள், பால்கனிகள் மற்றும் கூரைகளிலிருந்து விலகி இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணிக்கும் போது அவசர எச்சரிக்கை கிடைத்தால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி, அதிகாரிகள் ஆபத்து நீங்கியுள்ளதாக அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் கூட்டம் மற்றும் ஆபத்தான பகுதிகளைத் தவிர்ப்பதுடன், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் அல்லது பதிவுகளை எடுக்கவோ அவற்றை சமூக ஊடகங்களில் பகிரவோ அல்லது கருத்திடவோ வேண்டாம் எனவும் இலங்கையர்களுக்கு குறிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தொலைபேசி இலக்கங்கள்:
📞 மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்கள் – 911
📞 ஏனைய பகுதிகள் – 998
📞 இலங்கை துணைத் தூதரக அவசர இலக்கம் – 056 098 6671






