இலங்கையின் 2024 மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பின்படி, நாட்டில் 100 பெண்களுக்கு 93.3 ஆண்கள் என்ற பாலின விகிதம் பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 51.7% பெண்களும், 48.3% ஆண்களும் உள்ளனர். பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட 757,112 அதிகமாக உள்ளது.
2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 100 பெண்களுக்கு 93.8 ஆண்கள் என்ற விகிதம் காணப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 93.3 ஆகக் குறைந்துள்ளது. மேலும், நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலும் பாலின விகிதம் 100க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
மாவட்ட ரீதியில் மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.9 என்ற பாலின விகிதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 88.0 என்ற விகிதமும் பதிவாகியுள்ளன.
வயது அடிப்படையில் பார்க்கும்போது, இளம் வயதினரிடையே ஆண்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும், வயது அதிகரிக்கும்போது ஆண்களின் விகிதம் குறைந்து செல்கிறது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே 100 பெண்களுக்கு 69.8 ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களின் அதிக ஆயுட்காலம் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
மூலம்: இலங்கை மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் – 2024 மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு.





