அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கச் செல்லும் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இனி தங்களது துணைவர் அல்லது பிள்ளைகளை தங்களுடன் அழைத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் அறிவித்துள்ள புதிய குடியேற்ற சீர்திருத்தங்களின் கீழ் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.
எனினும், Pacific தீவு நாடுகள் மற்றும் ASEAN நாடுகளைச் சேர்ந்த சில மாணவர்கள், அத்துடன் PhD போன்ற முனைவர் பட்டப்படிப்புகளைத் தொடரும் மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் வகையில் விதிவிலக்குகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் எதிர்காலத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பொருந்தும். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சர்வதேச மாணவர்கள் மற்றும் அவர்களுடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படமாட்டார்கள்.
கடந்த நிதியாண்டில் அவுஸ்திரேலியா 337,427 மாணவர் விசாக்களை வழங்கியிருந்த நிலையில், அவற்றில் 45,991 விண்ணப்பங்கள் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சார்ந்தவர்களுக்கானவை என ABC தெரிவித்துள்ளது.
மேலும், தற்காலிக விசா பெற்றவர்கள் தொடர்ந்து வேறு வகையான விசாக்களுக்கு மாறி நாட்டில் தங்குவதை தடுக்கும் வகையில் ‘Visa Hopping’ நடைமுறைக்கும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கம், நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை தற்போதைய சுமார் 300,000 மட்டத்திலிருந்து 2027–28ஆம் ஆண்டில் 225,000 ஆகக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதனால், அவுஸ்திரேலியாவில் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளுடன் இணைந்து கல்வி கற்க திட்டமிடும் எதிர்கால சர்வதேச மாணவர்களுக்கு இந்த மாற்றம் முக்கியமானதாக அமையும்.





