வட அரபிக்கடலில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஒருவரது இராஜதந்திர பிரதிநிதிகளை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
செப்டெம்பர் 15ஆம் திகதி சர்வதேச கடற்பரப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை கப்பலுடன் மோதிய பாகிஸ்தான் கடற்படை கப்பலின் நடவடிக்கையை “ஏற்றுக்கொள்ள முடியாததும் தொழில்முறையற்றதுமாகும்” என இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பொறுப்பதிகாரி அழைக்கப்பட்டு இந்தியாவின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை கடற்படைப் பிரிவுகள் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கூற்றுப்படி, 1991ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சர்வதேச கடற்பரப்பில் இயங்கும் இரு நாடுகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறைந்தது 3 கடல் மைல் இடைவெளியை பேண வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தானும் இந்தியாவின் தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கூற்றுப்படி, சம்பவம் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) இடம்பெற்றதுடன், இந்திய கடற்படை கப்பலின் நடவடிக்கை தூண்டுதலானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் இடம்பெற்ற பகுதி தொடர்பில் இரு நாடுகளின் நிலைப்பாடுகள் மாறுபடுகின்றன. இந்தியா இது சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கிறது.
இந்திய கப்பலுக்கு பெரிய அளவிலான சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என இந்திய தரப்பு தெரிவித்துள்ளது. மோதலுக்குப் பின்னரும் அந்தக் கப்பல் தனது வழமையான பணியைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற நான்கு நாள் நேரடி இராணுவ மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி இராணுவ பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள புதிய சம்பவமாக இது அமைந்துள்ளது.





