அம்பாறை, மகாஓயா பகுதியில் ‘ஹக்க பட்டாஸ்’ எனப்படும் வெடிபொருள் பொறியில் சிக்கிய 12 வயதுடைய குட்டி யானை ஒன்று பல நாட்கள் கடும் வேதனையை அனுபவித்த நிலையில் உயிரிழந்துள்ளது.
காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இவ்வாறான சட்டவிரோத வெடிபொருள் பொறிகள் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானையின் வாயில் வெடிப்பு ஏற்பட்டதால் அதன் வாய் மற்றும் தாடைப் பகுதிகள் கடுமையாக சேதமடைந்திருந்ததாகவும், இதனால் உணவு மற்றும் நீரை உட்கொள்ள முடியாத நிலையில் பல நாட்கள் அவதிப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காயம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக குறித்த யானை இறுதியில் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண வனவிலங்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், மகாஓயா வனஜீவி அலுவலகத்தின் யானை கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இவ்வாறான வெடிபொருள் பொறிகள், யானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகளுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





