தங்கச் சங்கிலியை கொடுத்து காதலிக்காக படகில் இலங்கை வந்த தமிழக சிறுவன் – பின்னணி என்ன?

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நிலையில், தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி தலைமன்னாருக்கு அப்பால் உள்ள தொலைதூர மணல் திட்டில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட சிறுவனை, வழக்கமான கடல்சார் கண்காணிப்பின்போது கடற்படையினர் மீட்டுள்ளனர். அவருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டதுடன் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் சிறுவன் மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

படகுக் கட்டணத்துக்கு தங்கச் சங்கிலி

பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின்போது, இலங்கையில் உள்ள சிறுமி ஒருவரை சமூக ஊடகம் ஊடாக காதலித்து வந்ததாகவும், அவரை சந்திப்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் மன்னார் நோக்கி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்ததாக கூறப்பட்டது.

பயணத்திற்கான பணம் இல்லாததால், தனது தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும், பயணத்தை ஆரம்பிக்கும்போது தன்னிடம் 280 இந்திய ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் உள்ள மணல் திட்டில் சிறுவனை இறக்கிவிட்ட படகு அங்கிருந்து சென்றதாகவும், இலங்கை கடற்படை படகு வந்து தன்னை அழைத்துச் செல்லும் என படகோட்டி கூறியதை நம்பி சிறுவன் அங்கு காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை

கடந்த 12ஆம் திகதி சிறுவன் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது தன்னை சிறுவனின் பாட்டி என அடையாளப்படுத்திய பெண் ஒருவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும், அப்போது அவருக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், சிறுவனை அவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

பின்னர் சிறுவன் யாழ்ப்பாணம் அச்சுவேலி சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

செப்டம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற மேலதிக விசாரணையின்போது, குறித்த பெண் ஆவணங்கள் மூலம் தனது உறவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, நிபந்தனைகளுடன் சிறுவனை அவரது பாட்டியுடன் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பாட்டியை சந்திப்பதே பிரதான நோக்கம்?

இதனிடையே, சிறுவன் சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்ததற்கான பிரதான காரணம் காதல் தொடர்பு என வெளியான செய்தியில் முழுமையான உண்மை இல்லை என அவரது சட்டத்தரணி செல்வராஜ் தினேசன் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் பாட்டி மற்றும் உறவினர்கள் கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வசிப்பதாகவும், பாட்டியை சந்திப்பதே சிறுவனின் பிரதான நோக்கம் என உறவினர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவனின் பாட்டி, கடந்த 1996ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது குடும்பத்துடன் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றதாகவும், சிறுவன் அங்குள்ள அகதி முகாமில் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் தொலைபேசியில் உறவினரான சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் இருந்ததாகவும், இதன் அடிப்படையில் ஆரம்ப விசாரணையில் “ஃபேஸ்புக் காதல்” என குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சிறுவன் காதலியைத் தேடியே இலங்கை வந்தாரா அல்லது பாட்டியை சந்திப்பதே பிரதான நோக்கமா என்பது தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயத்தை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆபத்தான கடற்பயணம்

18 வயதுக்கு குறைந்த சிறுவன் ஒருவர் ஆவணங்கள் மற்றும் உரிய அனுமதியின்றி கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான ஆபத்தான சட்டவிரோத கடற்பயணங்கள் சிறார்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore