உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய ரஷ்யா–ஈரான் தடைகள் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100% வரை கூடுதல் தீர்வை வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறிப்பாக ரஷ்ய எண்ணெயின் முக்கிய கொள்வனவாளர்களான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை பாதிக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது உடனடியாக தீர்மானிக்கப்படவில்லை.
மேலும், மேற்கத்திய தடைகளைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்’ (Shadow Fleet) வலையமைப்பு, ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகள் உள்ளிட்டவற்றையும் புதிய சட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை இந்த சட்டமூலத்தை 262–159 என்ற வாக்குகளால் நிறைவேற்றியிருந்த நிலையில், செனட் சபையும் முன்னதாக அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த புதிய நடவடிக்கை தொடர்பாக இந்தியா, தனது வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது.





