பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் காணப்பட்ட சிறிய புள்ளிகளைக் கொண்ட காட்டுப் பூனை புதிய இனமாக விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Leopardus tilcayo என அறிவியல் ரீதியாக பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய இனம், வீட்டு பூனையை ஒத்த சிறிய அளவைக் கொண்டதாகும். அதன் உடலில் சிறுத்தையைப் போன்ற புள்ளிகளும் கோடுகளும் காணப்படுகின்றன.
முன்னதாக இதுபோன்ற தோற்றத்தைக் கொண்ட பிற காட்டுப் பூனை இனங்களுடன் குழப்பப்பட்டதால், இந்த இனம் நீண்ட காலமாக விஞ்ஞானிகளின் கவனத்திற்கு வராமல் இருந்துள்ளது.
பொலிவியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தற்போது இந்த இனத்தைச் சேர்ந்த ஒரே உறுதிப்படுத்தப்பட்ட உயிருள்ள பூனை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு ‘Tigrino’ என செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுமார் 10 வயதுடைய இந்தப் பூனை, பொலிவியாவின் Yungas பகுதியிலுள்ள காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு சரணாலயத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் அது வீட்டு பூனைக்குட்டி என கருதப்பட்ட போதிலும், வளர்ந்த பின்னர் அதன் தோற்றமும் நடத்தையும் வேறுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து, உயிருள்ள பூனைகள் மற்றும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்ட மாதிரிகளின் DNA-வை ஆய்வு செய்தனர். அதன் மூலம் இது தனித்துவமான புதிய இனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை மூன்று இனங்கள் என கருதப்பட்டிருந்த tiger cat குழுவில் ஐந்து தனித்தனி இனங்கள் இருக்கக்கூடும் என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
புதிய இனத்தை அடையாளம் காண்பது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஒரு இனத்தின் இருப்பிடமும் எண்ணிக்கையும் தெரியாமல் அதனை முறையாக பாதுகாப்பது கடினமாகும்.
காடழிப்பு, வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டை போன்ற காரணங்களால் சிறிய காட்டுப் பூனை இனங்கள் ஏற்கனவே அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த புதிய கண்டுபிடிப்பு, உலகின் உயிரினப் பல்வகைமை குறித்து இன்னும் முழுமையாக அறியப்படாத பல பகுதிகள் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





