முறையான இறக்குமதியாளர் விபரங்கள் குறிப்பிடப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை மொத்த விற்பனை செய்த இரண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1 இலட்சத்து 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் அடிப்படையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) இந்த அபராதத்தை விதித்துள்ளது.
தெஹிவளை, கெம்பல் பிளேஸில் இயங்கும் Global Commodity Solution (Pvt) Ltd நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சமும், கொழும்பு 09, கெட்டவலமுல்ல பிளேஸில் இயங்கும் Hallmark Industry நிறுவனத்திற்கு ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குழந்தை டயப்பர்கள் கிழிவடைதல் மற்றும் சேதமடைதல் தொடர்பாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணையின்போது, சட்டத்தின் கீழ் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டிய பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் இணையத்தள விபரங்கள் பொதிகளில் குறிப்பிடப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து குறித்த டயப்பர் தொகுதிகள் வழக்குப் பொருட்களாக கைப்பற்றப்பட்டு, இரு நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
குழந்தைகளின் தோலுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் டயப்பர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை வாங்கும்போது, பொதிகளில் இறக்குமதியாளர் விபரங்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலை (MRP) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர் பரிசோதிக்குமாறு CAA அறிவுறுத்தியுள்ளது.
சந்தையில் காணப்படும் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற CAA அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





