அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாசார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில், கல்வியில் சிறப்புச் சாதனைகளைப் படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் ‘Award of Excellence – 2026’ விருது வழங்கும் விழா, இன்று (18) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவர்கள் ஆகியோரின் கல்விச் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான என்.டி.எம். தாஹிர் மரைக்கார் கௌரவ அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டதுடன், அவர்களின் கல்வி முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம், எதிர்காலத்தில் கல்வி, சமூக மற்றும் தொழில்சார் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஆளுமைகளை உருவாக்குவதற்கு இத்தகைய முன்னெடுப்புகள் வலுச்சேர்க்கும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

கல்விச் சாதனைகளை வெறுமனே தனிநபர் வெற்றியாகக் கருதாமல், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முதலீடாக நோக்கும் இம்முயற்சி, மாணவர்களிடையே ஆரோக்கியமான கல்விப் போட்டியையும் உயர்ந்த இலக்குகளை நோக்கிய பயணத்தையும் ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பிரதிக் கல்வி பணிப்பாளர் நிலோபா, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், அம்பாறை மாவட்ட கல்விப் பிரிவு இணைப்பாளர் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். ஸபீஸ், மாவட்டக் குழுச் செயலாளர் எம்.எம்.ஏ. காதர்,புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் தலைவி ஏ.கே. றஸ்மியா மற்றும் சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், கல்வியாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.






