கனடாவில் வசிக்கும் 2 இலட்சம் தற்காலிகக் குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி பெற புதிய வாய்ப்பு!

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அனுமதியுடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் வரையான வெளிநாட்டினருக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency – PR) வழங்குவதற்கான புதிய குடியேற்றத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் 2027–2029 குடியேற்ற மட்டத் திட்டம் (Immigration Levels Plan) ஆகியவற்றில் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஏற்கனவே பணியாற்றி, அந்நாட்டின் சமூகங்களில் நிலைபெற்றுள்ள வெளிநாட்டினரைத் தக்கவைத்துக்கொள்வதுடன், தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும், குடியேற்ற விண்ணப்பங்கள் தொடர்பான தாமதங்களைக் குறைப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் வாய்ப்பு

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) தகவலின்படி, இந்தத் திட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

  1. தொழிலாளர் பிரிவு – 1 இலட்சம் பேர்

கனடாவில் ஏற்கனவே வசித்து வரும் தகுதியுடைய 1 இலட்சம் வரையான தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து, அந்தந்தப் பகுதிகளின் தொழிலாளர் தேவைகளுக்குப் பங்களிக்கக்கூடிய தகுதியுடைய நபர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர்.

குறிப்பாக, மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) கீழ் தகுதி பெறுவோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம்.

மேலும், அட்லாண்டிக் குடியேற்றத் திட்டம் (Atlantic Immigration Program), ஸ்டார்ட்-அப் விசா திட்டம் (Start-up Visa Program), விவசாயம் மற்றும் உணவுத்துறை சார்ந்த Agri-Food Pilot திட்டம், வீட்டு பராமரிப்புப் பணியாளர் குடியேற்றப் பாதைகள் உள்ளிட்ட சில மத்திய அரசின் குடியேற்றத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடையக்கூடும்.

  1. மனிதாபிமான மற்றும் குடும்பப் பிரிவு – 1 இலட்சம் பேர்

மீதமுள்ள 1 இலட்சம் இடங்கள் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் மற்றும் குடும்ப ஒன்றிணைப்பு தொடர்பான விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளன.

இதில் பல ஆண்டுகளாக நிரந்தர வதிவிட அனுமதிக்கான முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் உள்ளடங்குவர்.

மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையிலான தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், உக்ரைன் மற்றும் ஹொங்கொங் தொடர்பான சில குடியேற்றத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தவர்கள், குடும்ப ஒன்றிணைப்புத் திட்டத்தின் கீழ் தகுதி பெறுவோர் ஆகியோரும் இதில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளனர்.

2027 முதல் 2029 வரை கனடாவின் குடியேற்ற இலக்குகள்

இதற்கிடையில், 2027 முதல் 2029ஆம் ஆண்டு வரையான ஒவ்வொரு ஆண்டும் 3 இலட்சத்து 80 ஆயிரம் நிரந்தரக் குடியிருப்பாளர்களை அனுமதிப்பதற்கும், 3 இலட்சத்து 70 ஆயிரம் புதிய தற்காலிகக் குடியிருப்பாளர்களை வரவேற்பதற்கும் கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய நிரந்தர வதிவிடத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள அனுமதிகள், வழக்கமான வருடாந்த நிரந்தரக் குடியேற்ற இலக்குகளுக்கு மேலதிகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு 302.3 மில்லியன் கனேடிய டொலர்களை (C$302.3 million) ஒதுக்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

அனைவருக்கும் தானாகவே PR கிடைக்காது!

இந்த அறிவிப்பு கனடாவில் தற்காலிக வதிவிட அனுமதியுடன் வசிக்கும் அனைவருக்கும் தானாகவே நிரந்தர வதிவிட அனுமதி கிடைக்கும் என்பதைக் குறிக்கவில்லை.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் தகுதிநிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே கனடாவில் வசித்து வருபவர்களுக்கே இந்தப் புதிய முயற்சி பிரதானமாக முன்னுரிமை வழங்குகிறது.

எனவே, கனடாவில் கல்வி கற்கும் மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் ஏனைய தற்காலிகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறுவார்கள் எனக் கருத முடியாது. ஒவ்வொரு விண்ணப்பமும் சம்பந்தப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் விதிமுறைகளுக்கு அமைவாகப் பரிசீலிக்கப்படும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore