தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறையில் நீண்டகாலமாக நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சுகாதாரத்தைப் பேணியும் தொழிலில் ஈடுபட்டு வரும் சிகை அலங்காரத் தொழிலாளர்களின் கௌரவமும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் காலித் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் சிகை அலங்கார நிலையங்களுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, சிகை அலங்கார நிலையங்களுக்கான உரிய சுகாதார விதிமுறைகளை அறிமுகப்படுத்தி அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியமானதும் வரவேற்கத்தக்கதுமான நடவடிக்கையாகும்.
அதேவேளை, சில நிலையங்களில் காணப்படும் குறைபாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது பொருத்தமானதல்ல. குறைபாடுகள் காணப்படும் நிலையங்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி, அவற்றைச் சீர்செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆக்கபூர்வமான அணுகுமுறையாகும்.
சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், உழைக்கும் தொழிலாளர்களின் கௌரவமும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரு விடயங்களுக்கும் இடையில் சமநிலையான அணுகுமுறை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாதாந்தம் நடைபெறும் பிரதேச சபைக் கூட்டங்களின் பெறுமதியான நேரத்தை மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான விடயங்களை ஆராய்வதற்கும், அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதற்கும் பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சிகை அலங்கார நிலையங்களின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எழுந்துள்ள விடயங்களுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபையின் ஊடாக விரைவில் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை என்றும் பிரதேச சபை உறுப்பினர் காலித் மேலும் தெரிவித்தார்.





