மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து நன்றி தெரிவிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான அனோஜன் சிவராசா, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அனோஜனின் குடும்பத்தினருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பது தமது பொறுப்பு எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அனோஜனை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசுக்கும், சாதி, மதம், கட்சி மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து இந்த விடயத்தில் தலையீடு செய்த அனைவருக்கும் ஜனாதிபதி விசேட நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் தற்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

தமது மகனை மரண தண்டனையிலிருந்து விடுவித்து, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதல் தலையீடு செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோருக்கும் அனோஜனின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வாத் தலைமையிலான அதிகாரிகள், சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட ரீதியான தலையீடுகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த், ஜனாதிபதியை முதன்முதலில் சந்தித்தபோது வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் தலையீடு செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் காலப்பகுதியில் பங்களாதேஷைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தால் அனோஜனின் பெற்றோர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore